சென்னை: சென்னை கம்பன் விழாவில், ஈழத் தமிழர் நிலை பற்றிய பேச்சை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கினார்.
கம்பன் கழகம் சார்பில், 36-வது ஆண்டு கம்பன் விழா சென்னை மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
இறுதி நாளன்று, "கம்பன் புலமை, திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவில், கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், புதுவை தர்மராஜன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஏ.வி.எம்.சரவணன், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி மோகன், மூத்த வக்கீல் காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பட்டிமன்றத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜெயராஜ் பேசியதாவது:
நானும் தமிழன்தான்... ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா?ஒருவன், மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடும்போதுதான், சுதந்திரமாகப் பேச, செயல்பட விடுவதுதான் உண்மையான சுதந்திரம். அந்த சுதந்திரமில்லாத நாட்டின் குடிமகன் நான். ஆனாலும், என் எல்லையை உணர்ந்து, உங்கள் சுதந்திரத்தை வாழ்த்துகிறேன்.
ஒருவன் கோடிக் கோடியாகச் சம்பாதிக்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் அறமில்லாத வெற்றி தூக்கத்தைத் தராது.
அறமாக வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு போகலாம். ஆனால், சொர்க்கத்துக்கு போனவர்கள் யார் யார் என்று யாருக்கு தெரியும்.... காந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். என்று நாமாகச் சொல்லலாம். ஆனால் பார்த்தவர்கள் யார்?" என்றார்.
இந்தப் பேச்சை மேடைக்கு முன்வரிசை இருக்கையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த்.
ஈழத் தமிழரின் சுதந்திரமற்ற நிலை பற்றிய அந்தப் பேச்சைக் கேட்டதும் கண்கலங்கினார் அவர். சிறிது நேரம் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தவர் பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
No comments:
Post a Comment