அஜீத்தின் நடவடிக்கைகள் தங்களை வருத்தப்பட வைத்துள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.
நடிகர் அஜீத் அரசியலில் ஈடுபடவேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வந்தனர். தமிழக மெங்கும் போஸ்டர்கள் அச்சிட்டும், கூட்டங்கள் நடத்தியும் விருப்பங்களை தெரிவித்தனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அஜீத் சந்தித்த போது அவர் அ.தி.மு.க.வில் இணைவார் என்ற யூகங்களும் கிளம்பியது.
அதற்கேற்ப, சமீபத்திய தனது பேட்டியில் அரசியல் நிச்சயம் இறங்குவேன் என்றார்.
இந்த நிலையில் அஜீத்தை அரசியலில் ஈடுபட வற்புறுத்தி சென்னை பல்லாவரத்தில் நாளை மறுநாள் கூட்டம் நடத்த ரசிகர்களில் சிலர் ஏற்பாடு செய்தனர். இந்த கூட்டத்தில் அஜீத் பங்கேற்கிறார் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தகவல் அனுப்பினர். வேன்களில் பெருங்கூட்டத்தை திரட்டி பல்லாவரம் புறப்பட்டு வருமாறும் வற்புறுத்தினர்.
இக்கூட்டத்தில் அஜீத்தை அரசியலில் ஈடுபட வற்புறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்து இருந்தனர். இது பற்றி அஜீத்துக்கு தகவல் வந்ததும் கோபமானார்.
ரசிகர்களில் சிலர் சுய விளம்பரத்துக்காக கூட்டம் நடத்த இருப்பதாகவும் அதற்கு ஆதரவு வேண்டி இயக்கத்தின் சக உறுப்பினர்களிடையே விஷம பிரசாரம் செய்வதாகவும் செய்திகள் வந்துள்ளது. நான் அன்புக்கு கட்டு பட்டவன். நிர்ப்பந்தத்துக்கு பணிய மாட்டேன். என் கட்டளையை மீறி செயல்பட்டால் நற்பணி இயக்கத்தை கலைத்து விடுவேன் என அஜீத் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து வெளியூர்களில் இருந்து சென்னை கூட்டத்துக்கு புறப்பட தயாராக இருந்த ரசிகர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டனர். பல்லாவரம் கூட்டத்தையும் ரத்து செய்ய ரசிகர்கள் ஆலோசித்து வருகின்றனர். மீறி நடத்தினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
இதனால், வருத்தமடைந்த ரசிகர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment