Tuesday, February 15, 2011

ரஜினிக்கு NDTV விருது

என்டிடிவி குழுமத்தின் 'இந்த தசாப்தத்தின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞர்' விருது ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு என்டிடிவி குழுமம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இந்தியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதில் மிக உயர்ந்த 'கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த பொழுதுபோக்காளர் (Entertainer of The Decade)' விருதினை ரஜினிக்கு வழங்கியது என்டிடிவி.

நிறுவனத்தின் தலைவரும் பிரபல பத்திரிகையாளருமான பிரணாய் ராய் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்த விருதினை ரஜினிக்கு வழங்கினர்.

இந்த விருதினை ரஜினிக்கு வழங்குவதை தனது தனிப்பட்ட, மறக்கமுடியாத அனுபவம் என்று குறிப்பிட்ட என்டிடிவி தலைவர் பிரணாய் ராய், ரஜினியைப் போன்ற வெற்றிகளைக் குவித்தவர் யாருமில்லை என்றும், மற்ற எவரும் அவரது வெற்றியைத் தொடுவதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்றும் கூறினார்.

நடிகர் அஜய் தேவ்கன் ரஜினி பற்றிக் கூறும்போது, 'இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருப்பவர் ரஜினி. உலகின் மிகச் சிறந்த நடிகர் அவர். அவரது வெற்றியை யாராலும் நெருங்க முடியாது," என்றார்.

"ரஜினி நிற்கும் இந்த மேடையில் நிற்பதை எனது வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்," என்றார் நடிகை கத்ரீனா கைப்.

நடிகை வித்யாபாலன் கூறுகையில், "ரஜினி சாருடன் இணைந்து இந்த விழாவில் நாங்களும் விருது பெறுவது நிஜமா கனவா என என் தாயார் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறார். ரஜினி என்பவர் ஒரு அபூர்வ மனிதர், நிஜமான சூப்பர் ஸ்டார், நமது பெருமை" என்றார்.

சிறந்த தென்னிந்திய நடிகை விருதினைப் பெற்ற த்ரிஷா, "உலகில் ரஜினியைப் போன்ற மாபெரும் கலைஞரைப் பார்த்ததில்லை. அவர் காலத்தில் நான் நடிகையாக இருப்பதே பெருமை", என்றார்.

பின்னர் தனக்கு வழங்கப்பட்ட விருது குறித்து ரஜினி கூறுகையில், "இந்த விருதுக்கும் பெருமைக்கும் காரணம் எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்தான். நான் ஒரு கருவிதான். என்னை இயக்கும் இறைவனுக்கு நன்றி" என்றார்..

ஏற்கெனவே 2007-ம் ஆண்டு என்டிடிவியின் இந்தியாவின் சிறந்த பொழுதுபோக்காளர் விருது ரஜினிக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...