Thursday, June 24, 2010

இலங்கை தமிழர் பிரச்சனை ஒரு முடிவடைந்த விஷயம் - சூர்யா (சரவணன்) ?)

சென்னை: இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு எதிரான போராட்டம் செத்துப்போன விவகாரம். அதை மீண்டும் கிளறத் தேவையில்லை. இதன் அடிப்படையில், நானும் விவேக் ஓபராயும் நடித்துள்ள படத்துக்கு தடை விதிக்க முடியாது..", என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

இன்று வியாழக்கிழமை 'பெங்களூர் மிர்ரர்' நாளிதழுக்கு சூர்யா அளித்துள்ள பேட்டி:

"தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் நீங்கள் நடித்துள்ள ரத்த சரித்திரா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே?"

"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே (ராவணனுக்கு எதற்காக தடை விதிக்க வேண்டும்?).

ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன்.

நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சினை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?" என்று கேட்டுள்ளார் சூர்யா.

கொழும்பில் நடந்த சர்வதேச இந்திய திரை விழாவை தென்னகத் திரையுலகமே புறக்கணித்தது. வட இந்தியாவின் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான், அமீர்கான், ஐஸ்வர்யா ராய், ஜான் ஆபிரகாம், அக்ஷய் குமார் என முன்னணி நட்சத்திரங்கள் தமிழ் உணர்வாளர்களின் வேண்டுகோளை ஏற்று இலங்கை போகாமல் தவிர்த்தனர். இதையும் மீறி சில நடிகர்கள் போனார்கள். அவர்களின் படங்கள் இனி தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் திரையிடப்பட மாட்டாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்தது.

விழாவும் படுதோல்வியடைந்தது. இன்னொரு பக்கம் தடையை மீறி ஐஃபா விழாவுக்குப் போன விவேக் ஓபராய், சல்மான்கான், ஹ்ரித்திக் ரோஷன் படங்கள் தென்னகத்தில் வெளியாகத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சூர்யா நடித்து அடுத்து வெளியாக உள்ள ரத்த சரித்திரம் தமிழ், இந்திப் படங்களில் சூர்யாவுடன் விவேக் ஓபராய் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஐஃபா விழாவை எதிர்த்து மும்பையில் ஆர்ப்பாட்டங்களில் இறங்கி அமிதாப் போன்றவர்களை விழாவுக்குச் செல்லாமல் தடுத்த சீமானின் நாம் தமிழர் கட்சி, ரத்த சரித்திரம் ரிலீஸ் விஷயத்தில் மட்டும் அடக்கி வாசிக்கிறது.

'சூர்யா என் தம்பி. அவரது படத்தை மட்டும் மன்னிக்கலாம்' என்று பல்டியடித்துள்ளார் சீமான். ஆனால் உண்மையில் சூர்யாவும் அவரது தந்தை சிவகுமாரும் சீமானை சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.

சீமானின் இந்த கொள்கை நழுவலுக்கு உணர்வாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்த நேரத்தில்தான், கடந்த 2 மாத காலமாக தென்னிந்திய திரையுலகமே நடத்தி வரும் ஐஃபா விழா எதிர்ப்பு போராட்டத்தை 'செத்துப்போன விவகாரம்' என சர்வ சாதாரணமாக கூறியுள்ளார் சூர்யா.

நடிகர்கள் இலங்கைக்குப் போனது நல்ல விஷயம் என்று இப்போது கூறும் இவர், இரு வாரங்களுக்கு முன் இந்த போராட்டம் உச்சத்திலிருந்த போது போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறியது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...